கர்நாடக தட்ட இட்லி

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,கர்நாடக தட்ட இட்லி ! நாங்கள் பெங்களூரு வந்த முதல் நாள் இந்த இட்லியை சுவைத்தேன்.அன்று எங்கள் பொருட்கள் எல்லாம் வர தாமதம் ஆனதால் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் இட்லி வாங்கினோம் , இட்லியை பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி , தட்டையாக இருந்தது .ஹோட்டலில் தவறாக கொடுத்துவிட்டார்கள் என்று நினைத்து கேட்டபொழுது ,இது கர்நாடக புகழ் தட்ட இட்லி என்றார்கள் .
சுவைத்த பின் தான் தெரிந்தது இது நிச்சயம் புகழ் பெற்ற உணவுதான் என்று , மிகவும் மெது மெதுவென்று ,சுவையாக சாம்பாருடன் சாப்பிட அருமையாக இருந்தது.அன்றிலிருந்து இந்த இட்லியை வீட்டில் செய்யவேண்டும் என்று நினைத்து இன்று செய்தேன்.
சுவையான , தட்ட இட்லி செய்முறை உங்களுக்காக ,
ரெசிபி : smithakalluraya.com.
தேவையானவை :
பச்சரிசி – 4 கப் .
உளுந்தம் பருப்பு -1 கப்
அவல் -1 கப்.
ஜவ்வரிசி – 1/2 கப்.
சமையல் சோடா – 1/2 தேக்கரண்டி.
உப்பு – தேவையான அளவு .
நெய் -1 தேக்கரண்டி .
செய்முறை :
அ) அரிசி , பருப்பு மற்றும் ஜவ்வரிசியை நன்றாக கழுவி , தனி தனியாக ஊறவைக்கவும் .அரிசி , ஜவ்வரிசியை 4 மணி நேரமும் , உளுத்தம்பருப்பை 1 .5 மணி நேரமும் ஊறவைக்கவும்.

ஆ) ஊறவைத்தபிறகு உளுந்தம் பருப்பை முதலில் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும் .

இ) பின்னர் அரிசி,ஜவ்வரிசி , அவல் ஆகியவற்றை அரைத்து , உளுந்தம் மாவுடன் சேர்த்து கலக்கவும் .

ஈ) உப்பு சேர்த்து கலக்கி , 8 மணிநேரம் புளிக்கவிடவும்.
உ) மறுநாள் மாவு புளித்து பொங்கிவரும் , அத்துடன் சமையல் சோடா சேர்த்து கலக்கவும் .

ஊ) விளிம்பு சற்று உயரமாக இருக்கும் தட்டில் நெய் தடவி , அரை தட்டிற்கு மாவை ஊற்றி மிதமான சூட்டில் 15 நிமிடம் அல்லது கத்தி சுத்தமாக வரும்வரை வேகவிடவும் .

எ) வாழை இழை இருந்தால் தட்டின் மேல் இழை வைத்து மாவை ஊற்றி வேகவிடலாம்.
.

ஏ) இட்லி வெந்தவுடன் , அடுப்பில் இருந்து இறக்கி ஒரு நிமிடம் காத்திருக்கவும் , பின்பு தட்டில் இருந்து எடுத்து பெரியதுண்டுகளாக வெட்டி சாம்பாருடன் அல்லது விருப்பமான சட்னியுடன் பரிமாறலாம் ,நான் தக்காளி குழம்புடன் பரிமாறினேன்.


குறிப்பு :
அ) சமையல் சோடா சேர்க்காமலும் இட்லி நன்றாக இருக்கும் .
ஆ) வாழை இழையில் வேகவைப்பது ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது , அது மட்டுமல்லாது இட்லியின் சுவையும் கூடும்.
இ) இட்லியை அதிகநேரம் வேகவைக்கவேண்டாம்.
ஈ) இட்லி வெந்தபிறகு ஒரு நிமிடம் கழித்து ,தட்டில் இருந்து எடுத்தால் இட்லி வெட்டுவதற்கு சுலபமாக ,பிய்ந்துபோகாமல் வரும்.
உ) மீதமிருக்கும் இந்த இட்லி மாவில் தோசையும் செய்யலாம் ,மெல்லிய தோசையாக இல்லாமல் ஊத்தப்பம் போல் செய்தால் சுவை நன்றாக இருக்கும்

No comments:
Post a Comment